சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1099   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1211 )  

மடல் அவிழ் சரோருக

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான

மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
     மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை
     மனமகிழ வேயளித்து ...... மறவாதே
உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை
     ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான்
உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை
     யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
     சரணயுக மாயனுக்கு ...... மருகோனே
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர
     சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்
     அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட
     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
Easy Version:
மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து மத
சுக ப்ரதாப சித்ர முலையாலே
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுத அதரத்தை
மனம் மகிழவே அளித்து மறவாதே
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை
ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் உரை செய்
மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு
போதகத்தை அருள்வாயே
தட மகுட நாக ரத்ந பட(ம்) நெளிய ஆடு பத்ம சரண யுக
மாயனுக்கு மருகோனே
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய்
நடத்து மயில் வீரா
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறு
முகவ ஞான தத்வ நெறி வாழ்வே
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர்
சிறை மீள விட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து மத
சுக ப்ரதாப சித்ர முலையாலே
... இதழ்கள் விரிந்த தாமரை போன்ற
வாயினின்று அரும்புகின்ற புன்சிரிப்பால் (மனத்தைக்) கவர்ந்து,
மன்மதன் எழுப்பும் இன்ப நிலைக்குப் பேர் பெற்ற அழகிய மார்பினால்
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுத அதரத்தை
மனம் மகிழவே அளித்து மறவாதே
... மலர்கள் விரித்த படுக்கையின்
மேல் அணைத்து, (அச்சமயத்தில்) உண்டாகும் அமுதம் போன்ற வாயிதழ்
ஊறலை மனமகிழ்ச்சியுடனே மறவாமல் தந்து,
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை
ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் உரை செய்
...
உடலும் உயிரும் ஒன்றுபட்டு இருக்க உன்னுடையது, என்னுடையது
என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று
அழுத்தமாகப் பேசும்,
மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு
போதகத்தை அருள்வாயே
... விலைமாதர்கள் தரும் புணர்ச்சியால்
வரும் வருத்தங்களை ஒழிக்க வல்ல ஓர் உபதேச மொழியை அருள்வாயாக.
தட மகுட நாக ரத்ந பட(ம்) நெளிய ஆடு பத்ம சரண யுக
மாயனுக்கு மருகோனே
... விசாலமான மகுடங்களைக் கொண்ட,
நாக ரத்தினம் உள்ள (காளிங்கன் என்னும் பாம்பின்) படம் நெகிழ்வு உற
நடனமாடிய தாமரை அன்ன இரண்டு திருவடிகளை உடைய
திருமாலுக்கு மருகோனே,
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய்
நடத்து மயில் வீரா
... சரவணப் பொய்கையில் அவதரித்த குமரனே,
முருகேசனே, சக்ரவாள கிரியை வலம் வரும்படிச் செலுத்திய மயில் வீரனே,
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறு
முகவ ஞான தத்வ நெறி வாழ்வே
... வெற்றி பொருந்திய
வேலாயுதத்தைத் திருக் கையில் அழகு விளங்க வைத்திருக்கும் ஆறு
முகனே, மெய்ஞ் ஞான உண்மை வழியில் காணக் கிடைக்கும் செல்வமே,
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர்
சிறை மீள விட்ட பெருமாளே.
... அசுரர் குலத்தவர்களை வேருடன்
வெட்டி அழித்து, நீயே அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச்
சிறையிலிருந்து மீள்வித்த பெருமாளே.

Similar songs:

1097 - எழுபிறவி நீர்நில (பொதுப்பாடல்கள்)

தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான

1098 - நடை உடையிலே (பொதுப்பாடல்கள்)

தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான

1099 - மடல் அவிழ் சரோருக (பொதுப்பாடல்கள்)

தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான

1112 - சுட்டதுபோல் ஆசை (பொதுப்பாடல்கள்)

தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song